Wednesday, November 24, 2010

இலங்கை முஸ்லிம்களின் பூர்வீகம்

உலகின் ஆதிக்குடிகளுக்கான தேடலும் உலகம் தழுவும் தூதுக்கான புதிய திசை வழியும்.

இதுகாறும் உருவாக்கப்பட்ட வரலாறுகள் ஆதிக்க சக்திகளின் வரலாறாகவே, ஆதிக்க சக்திகளை நியாயப்படுத்தும் வரலாறாகவே, ஆதிக்க சக்திகளைப் பெருமைப்படுத்தும் வரலாறாகவே இருக்கின்றன. இன்றுவரை ஆதிக்க சக்திகளின் கருவியாகவே வரலாறு பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

வரலாறு ஆதிக்க சக்திகளின் வரலாறாக இருப்பதால்தான் மன்னர்களின் போர்களும் ஆடம்பரங்களும் இரக்கமற்ற செயல்களும் பட்டியலிடப்படுகின்றன. மன்னர்களின் சாதனைகளும் வீரப் பிரதாபங்களையும் பட்டியலிடும் வரலாற்று நூல்கள் வரலாற்றுக்குப் பயன்படும் சில செய்திகளைக் கொண்டிருந்தாலும் அவற்றை முழுமையான வரலாறாக அப்படியே ஏற்க முடியாது.

புகழ்ந்துரைப்பது, பெருமைப்படுத்துவது போன்ற நோக்கங்களுக்காக எழுதப்பட்ட இந்நூல்களில் யாரைப் பெருமைப்படுத்த எழுதினார்களோ அவர்களை அண்டியே அவர்களது தயவில் வாழ்க்கை நடத்தும் அந்த எழுத்தாளர்களுக்கு குறைநிறைகளை ஒளிக்காமல் தெட்டத்தெளிவாக எடுத்துரைக்கும் துணிச்சல் அல்லது வரலாற்றுப் பார்வை இருப்பதில்லை. அவ்வாறே எந்தக் கல்வெட்டும் அதைச் செதுக்கிய மன்னனின் தோல்விகளையும் தவறுகளையும் பட்டியலிடுவதில்லை. அதாவது தற்பெருமைகள் வரலாறாவதில்லை. அது சரியான, நேர்மையான வரலாறாகக் கதைக்கப்படுவதுமில்லை.

வெறும் புகழுரைகளை மையமாக வைத்து வரலாறு படைக்கும் போக்கிலிருந்து அல்குர்ஆன் வித்தியாசப்படுகிறது. அது எந்த மன்னரையும் புகழ்நிலையில் வைத்துப் பேசுவதில்லை. வரலாற்றிற்கான ஆதாரங்கள், அதற்கான சான்றுகள் அனைத்துமே ஆதிக்க சக்திகளின் கருவிகளாக இருக்கும்போது ஒடுக்கப்பட்ட மக்களின், மண்ணின், பூர்வீகக் குடிகளின் அல்லது ஆதிக்க சக்திகளுக்கு எதிராகப் போராடுகின்ற மக்களின் வரலாறுகளைப் படைப்பதும் பார்ப்பதும் எவ்வாறு சாத்தியமாகும்? ஆளப்பட்டவர்கள், ஒடுக்கப்பட்டவர்கள் என்போரை மையமாகக் கொண்ட வரலாற்றை உருவாக்கும் சாத்தியக்கூறு உண்டா?

“வரலாற்றை விளக்குபவன்தான் வரலாற்றை உருவாக்குகிறான். நிகழ்வுகளைப் பட்டியலிடுவது மட்டும் வரலாறாகிவிடமாட்டாது. அவற்றை விளக்குவதில்தான் வரலாறு இருக்கிறது” என்று பேராசிரியர் முஹம்மத் குதுப் ரஹிமஹுல்லாஹ் கூறுகின்றார்.

உண்மையில் விளக்குவதில்தான் வரலாறு இருக்கிறது. எதை விளங்கிக் கொள்ள வேண்டும் என்று ஆர்வம் காட்டுகிறோமோ அதை விளக்குவதில்தான் வரலாறு இருக்கிறது. ஆகவே, தமது அக்கறைகளின், ஆர்வங்களின் நோக்கங்களின் அடிப்படையில்தான் நிகழ்வுகளைத் தேர்வு செய்வதும் அவற்றை விளக்குவதும் ஒவ்வொன்றாகத் தொடர்புபடுத்தி தத்துவத் தெளிவு பெறுவதும் அமைகின்றது.

ஒடுக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட, ஏமாற்றப்பட்ட, ஆளப்பட்டவர்கள், உழைத்து வாழ்பவர்கள், உரிமைகளை இழந்தவர்கள் மீது நமது அக்கறை இருப்பின், நமது வரலாற்றுப் பார்வை அவர்களைப் பற்றிய உண்மைகளை அறிவதிலும் அவர்களின் மறைமுகமான போராட்டங்களைப் புரிந்து கொள்வதிலும் மனித குலம் நாகரிகத்தின் முழுமையை நோக்கிச் செல்வதில் அவர்களது பங்களிப்பை உரியமுறையில் உணர்ந்து வெளிப்படுத்துவதற்குமாக நமது வரலாற்றுப்பார்வை கூர்மையடைய வேண்டும்.

வரலாற்று மூலங்களாக உள்ளவை எல்லாம் ஆதிக்க சக்திகளால் ஆதிக்க சக்திகளுக்கு சாதகமாக அவர்களை நியாயப்படுத்தும் வகையில் இருந்தாலும் பூர்வீகக் குடிகளின் வரலாற்றை அறிவதற்குப் போதுமான தடங்கள் இருக்கத்தான் செய்கின்றன. அவற்றைத் தேடித்தெரிந்து கொள்ளவும் வரலாற்றுக்குப் பயன்படுத்தவும் அடிப்படையான தகுதியும் கருவியும்தான் விமர்சனப்பார்வை ஆகும். அதாவது சரியான வரலாற்றுப் பார்வை, சரியான வரலாற்றுணர்வு, அறிவு நாணயத்துடனான விமரிசனப்பார்வை இவை ஆதிக்குடிகளின் இந்த மண்ணில் வேரோடி அழிக்க முடியாதவாறு ஆகிவிட்ட நமது மக்களின் வரலாற்றை அறிய அடிப்படைகளாக அமைகின்றன.

வரலாறு கண்ட முதல் நிலம் இலங்கை. ஆனால் இலங்கை முஸ்லிம்கள் அந்த வரலாற்றைத் தம்மகத்தில் சுமந்திருந்தும் உரத்துச் சொல்ல முடியாதவர்களாக தயங்கிக் கொண்டிருந்தனர். அது உலகின் எல்லாத் தேசங்களுக்கும் நாடுகளுக்கும் முற்பட்ட எல்லா நாடுகளையும் விட நீடித்த தொடர்ச்சியான வரலாறாகும். ஆனால், வரலாற்றெழுதியல் தொடங்கிய காலத்துக்கு முன்பிருந்தே அவர்கள் உயர்ந்த பண்பாடும் நாகரிகமும் கொண்டவர்களாக விளங்கினர். இயற்கை அனர்த்தங்களாலும் வரலாற்றின் பல்வேறு கட்டங்களில் ஆதிக்க சக்திகளால் அழிக்கப்பட்டும் கபளீகரம் செய்யப்பட்டும் இன்றுவரை அவர்கள் வாழ்ந்துவருவது இறைவனின் பெருங் கருணையாகும்.

முகவுரையாகத் தந்த இந்த வரலாற்று நோக்குநிலையிலிருந்து முகிழ்த்த நூல்தான் அ.வா. முஹ்சீன் எழுதிய “இலங்கை முஸ்லிம்களின் பூர்வீகம்” என்ற வரலாற்றுப் பொக்கிஷமாகும்.

சுமார் 210 பக்கங்களைக் கொண்ட இந்நூல் வரலாற்றுத் துறை சார்ந்தவர்களுக்கு மட்டுமல்ல, நமது வரலாற்றை அறிய விரும்புகின்ற யாருக்கும் அதிர்வையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தாமல் இருக்கப் போவதில்லை. எந்த வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு எம்மீதான இனச்சுத்திகரிப்பையும் இன அழிப்பையும் நியாயப்படுத்தினார்களோ அந்த வரலாற்றுக்கு ஓர் எதிர் வரலாற்று எடுத்துரைப்பாக, எதிர்க் கதையாடலாக இந்நூல் அமைகிறது.

புத்தரே பிறக்காத ஒரு நாட்டை புத்தரின் தேசம் (மே புதுன்கே தேஷய) எனக் கட்டமைப்பவர்களுக்கு இந்நூல் ஒரு சாட்டையடியாகும். சுமார் ஒரு நூற்றாண்டுக்கு முன் சேர். பொன். இராமநாதனுக்கு ஐ.எல்.எம் அப்துல் அஸீஸ் கொடுத்த சாட்டையடியை விட இந்நூல் பல படிகள் தாண்டிவிட்டதென்றே தோன்றுகிறது.

அராபிய ஆண்வழித்தோன்றல் என்ற நூறு வருட கதையாடலுக்கு முற்றுப்புள்ளி வைத்து, இந்நூல் முதன் முதலில் இந்நாட்டில் பாதச் சுவட்டைப் பதித்த ஆதி பிதா ஆதம் நபியின் நேரடி வாரிசுகளே இலங்கை முஸ்மிகள் என்பதை ஆணித்தரமாக எடுத்துரைக்கின்றது. கி.பி 8 ஆம் நூற்றாண்டில்தான் இலங்கை முஸ்லிம்களின் வரலாறு தொடங்குகிறது என்ற கதையளப்பு இதன் மூலம் தகர்க்கப்படுகிறது.

இலங்கை முஸ்லிம்கள் அரபுக்களின் வழித்தோன்றல்கள் / வந்தேறு குடிகள் / இலங்கை முஸ்லிம்கள் இனரீதியாகத் தமிழர்கள் / இலங்கை முஸ்லிம்கள் தமிழர்களாக இருந்து மதம் மாறியவர்கள் என்று இதுகாறும் கூறப்பட்டு வந்த மொழிபுகள் எல்லாம் இலங்கை முஸ்லிம்களின் தனித்துவ அடையாளத்தை நிறுவ உதவவில்லை. யாத்திரிகர்காளும் தேசாதிபதிகளாலும் காலனித்துவ உத்தியோகத்தர்களாலும் எழுதப்படும் வரலாறு முழுமையானதல்ல. அல்குர்ஆனின் அடிப்படையிலான வரலாற்று அணுகுமுறை தேவை என்பதை இந்நூல் வலியுறுத்துகின்றது. இன்று இலங்கை எதிர்கொள்ளும் இனச்சங்காரத்திலிருந்து விடுபட்டு “சகஜீவனம்” என்ற சிந்தனையை நோக்கி நகர்வதற்கான புதிய திசை வழிகளையும் இந்நூல் கோடிகாட்டிச் செல்கிறது.

ஐந்து இயல்களாகப் பிரிக்கப்பட்டுள்ள இந்த நூல், முதலாம் இயலில் அறிவு குறித்த கோட்பாட்டுப் பரிசீலனையை மேற்கொள்கிறது. அனுபவம், விஞ்ஞானம், கணிதம், வரலாறு, தர்க்கம், தத்துவம், பகுத்தறிவு போன்ற அறிவின் பன்முகக் கூறுகளை விளக்கும் இவ்வியல், நம்பிக்கையை அறிவின் ஒரு வடிவமாகப் பார்க்கச் சொல்கிறது. இவ்வகை அறிவுகள் அனைத்தும் தம்மளவில் தனித்தன்மை கொண்டவையாகவும் மனித வாழ்க்கையுடன் பின்னிப் பிணைந்து தமக்குரிய முக்கியத்துவங்களைக் கொண்டவையாகவும் இருக்கின்றன. ஒரு அறிவு வகையை முதன்மைப் படுத்துவதோ அல்லது உயர்நிலைப்படுத்துவதோ இறுதியில் அறிவியல்ரீதியான அதிகாரப் படிநிலையை உருவாக்குவதாகவே அமையும். நவீனத்துவம் வழங்கிய பிரதிகூலங்களில் இவ்வதிகாரப் படிநிலையும் ஒன்றாகும்.

கிறிஸ்தவ மத அதிகாரத்தை எதிர்க்கப் புறப்பட்ட அறிவொளிக்காலப் புத்திஜீவிகள் ஒட்டுமொத்த மானுட நம்பிக்கைகளையும் அறிவியல் துறையிலிருந்து புறமொதுக்கி துடக்கு மனப்பான்மையுடன் அணுகினர். ஆனால் இந்நிலை இன்று மாறி வருகிறது. பின் நவீனச் சிந்தனைகள் நம்பிக்கையையும் அறிவாக நோக்கும் நிலையையும் தோற்றுவித்துள்ளன. எல்லாவற்றையும் விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்க வேண்டும் என்ற வற்புறுத்தல் இதன் மூலம் தகர்க்கப்படுகின்றது.

பிற சமூகங்கள் மீதான ஆக்கிரமிப்பு, சுரண்டல், கொலை, கொள்ளை, கட்டுப்பாடு, நிர்ப்பந்தம் போன்ற வழிமுறைகளினூடாக தமக்குரிய அறிதல் முறையாக விஞ்ஞானத்தை வளர்த்து வந்திருக்கின்ற இன்றைய மேற்கத்திய சமூகங்களின் அத்தகைய வாய்ப்புகளையும் அறிதல் முறைகளையும் கொண்டிராத சமூகங்களின் அனுபவ அறிவு, நம்பிக்கைள் போன்றவற்றை ஒதுக்கித்தள்ளி, அந்த சமூகங்களை தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றன.
இந்நிலையில் தமது வராற்றைப் புதிதாய் எழுதவேண்டிய அவசியத்தில் உள்ள சமூகங்கள் அறிவின் பல்வேறு வடிவங்களைப் புரிந்து கொள்வதோடு அவை ஒவ்வொன்றும் கொண்டிருக்கின்ற முக்கியத்துவத்தையும் சமத்துவத்தையும் வலியுறுத்துவது அவசியமாகிறது என்று ஆசிரியர் கூறுகின்றார்.

இது கிழவிகளின் கதை, கர்ண பரம்பரைக் கதை, கட்டுக்கதை என்பதெல்லாம் நவீனத்துவவாதிகளின் வாயிலிருந்து வருகின்ற அபாயகரமான வார்த்தைகள் என்பதை நாம் மனங்கொள்ள வேண்டும்.

அடுத்து, படைப்புக் கொள்கையின் அடிப்படையில் மனிதத் தோற்றத்தை விளக்குகிறார்.

“தட்டினால் ஓசை தரக்கூடிய மாற்றத்திற்குரிய கறுப்பு நிறக் களிமண்ணினால் நிச்சமாக நாம் ஆதத்தைப் படைத்தோம்” (15:26) என்ற அல்குர்ஆன் வசனத்தை வைத்து தொடக்க மனிதர்கள் கறுப்பானவர்கள் என்ற அண்மைய விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்போடு தொடர்புபடுத்தி ஆராய்கின்றார்.

முதல் மனிதனின் நாடு, பாதச்சுவடுகளும் கபுறடிகளும் மனிதத்துவக்கத்தின் மறையா அடையாளங்கள் என்ற தலைப்புகளின் கீழ் இலங்கையின் புவியில் அமைப்பு, இலங்கையின் காலநிலை சுவனத்திற்கு ஏற்ற மற்றொரு சுவனத்திற்குப் பொருத்தமாக அமைந்துள்ளதாகக் குறிப்பிடுகிறார்.

“இலங்கையின் பூர்வீகக் குடிகள்” என்ற தலைப்பின் கீழ் நாகருக்கும் சோனகருக்குமிடையிலான தொடர்பு பற்றி விளக்கப்படுகிறது. இலங்கையின் ஆதிக்குடிகள் வாழ்ந்ததாக அடையாளம் காணப்பட்டிருக்கின்ற பல பிரதேசங்களில் முஸ்லிம்களே பாரம்பரியமாகவும் செறிவாகவும் வாழ்ந்து வந்திருக்கின்றனர். இவ்விரு இனங்களுக்குமிடையிலான அத்தியந்த உறவு பற்றி ஏழு வகையான ஆதாரங்களைக் காட்டி நிரூபித்திருக்கிறார். பின், சோனகர் யவனர்களிலிருந்து வந்தவர்கள் அல்லர். யவனர் என்ற சொல் கையாளப்படுவதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே சோனகர் என்ற பதம் வரலாற்றில் பிரயோகிக்கப்பட்டுள்ளது என்பதை தொலமியின் இலங்கை இட விளக்கப்படத்தின் மூலம் நரூபித்திருக்கிறார்.

“இலங்கையில் நபிமார்கள்” என்ற தலைப்பின் கீழ் அவ்வையார் – ஹவ்வா, முருகன் – ஹிழ்ர் ஒப்பீடு செய்யப்படுகிறது. இந்த வகையில் இலங்கையிலும் இந்தியாவிலும் வாழ்கின்ற சமூகங்கள் மத்தியில் நிலவுகின்ற வேறுபட்ட ஆயிரக்கணக்கான கடவுள் பற்றிய நம்பிக்கைகளும் வழிபாடுகளும் வெவ்வேறு நபிமார்களை கடவுளாக்கியதன் விளைவாக ஏற்பட்டிருக்கக்கூடிய சாத்தியப்பாட்டை நாம் கவனத்திற் கொள்ள வேண்டும் என்று ஆசிரியர் கேட்டுக் கொள்கிறார்.

இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் நிலவும் குடிமரபு தமிழர்களிடமிருந்து வந்த பண்பாடல்ல. அது முஸ்லிம்களிடமிருந்தே ஏனைய சமூகங்களுக்குச் சென்றது என்பதாகக் கூறுகின்றார். “இஸ்லாமானவர்கள்” என்ற பதம் மதம் மாறியவர் என்ற கருத்திலல்லாமல் முன்னைய தூதுத்துவங்களை ஏற்று வாழ்ந்த சோனகர் இறுதியாக வந்த தூதையும் எவ்வாறு ஏற்று முழுமைப்படுத்திக் கொண்டனர் என்பதை விளக்குகிறார்.

இலங்கைச் சோனகர் உலகின் முதன் மனிதக் குடிகள் என்றால் தமிழர்களின் சாதிப் படிநிலையில் உள்ள கீழ்வகுப்பினர் இஸ்லாத்தை ஏற்றதால் ஏற்பட்டதல்ல. அராபிய ஆண்வழித் தோன்றல் என்ற கருத்தாக்கத்தையும் இவ்வியலில் மறுதலிக்கின்றார்.

சோனக மொழியை உலகின் முதல் மொழியாகக் குறிப்பிடும் மொழி குறித்த மிகக் கூர்மையான கோட்பாட்டுப் பரிசீலனையை மேற்கொள்கின்றார் ஆசிரியர். டார்வினின் உயிரியல் ரீதியான பரிணாமவாதம் சமூகவியலில் மொழியியல் அணுகுமுறைகளில் எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதை ஆசிரியர் மொழிகள் இறைவனின் அத்தாட்சிகள்; அல்லாஹ் ஒவ்வொரு சமூகத்திற்கும் மொழியையும் பண்பாட்டையும் எவ்வாறு வழங்கியுள்ளான் என்பதை நிரூபிக்கின்றார். மொழியின் பரிணாமம் உண்மையென்றால் மொழிகளுக்கிடையில் ஒற்றுமை வந்திருக்கவே முடியாது என்று கூறுகின்றார். மொழியியல் குறித்த இத்தகைய அணுகுமுறை தமிழுக்கு மிகவும் புதியதாகும்.

சோனக மொழி தமிழ், மலையாளம், தெலுங்கு, துளு, சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் எவ்வாறு இடம்பெற்றுள்ளது என்பதையும் பட்டியல் போட்டு விபரித்துள்ளார். இவ்வியல் தனியான நூலை பல்வேறு கிளை ஆய்வுகளைச் செய்ய வேண்டிய அவசியத்தை ஏற்படுத்தியுள்ளமை இந்நூலின் மற்றோர் சிறப்பம்சமாகும். மொழி பற்றிய இயலின் இறுதி அம்சமாக சோனகருக்கான வரிவடிவம் பற்றியும் பேசப்படுகின்றது.

இறுதியில் “ஒரு வரலாற்று மறதி” என்ற இறுதி இயலில் இருட்குகையிலிருந்து ஒளியை நோக்கி நம்மை ஆசிரியர் அழைத்துச் செல்கிறார்.

அல் ஹஸனாதில் வெளிவந்தது
தேங்க்ஸ்: http://idrees.lk/?p=441

No comments: