Wednesday, November 24, 2010

தமிழ் - முஸ்லிம் உறவுகள்: வடக்கு முஸ்லிம்களின் பலவந்த வெளியேற்றம் - 20 வருடங்களுக்குப் பின்பு! : SLIF & SLDF

வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம்

சமாதானம் புரிந்துணர்வு, பொருளாதார மேம்பாடு, அரசியல் தீர்வு ஆகியவற்றை முன்னெடுக்க சமூகங்களிடையே சிதைந்துபோன சமூக உறவுகளை கட்டியெழுப்பல் அவசியம். இலங்கையை இன்று எதிர்கொள்ளும் ஜனநாயகம், நீதி, சிறுபான்மை மக்களின் உரிமைகள் போன்ற அடிப்படை அரசியல் பிரச்சினைகளை எதிர்கொள்ள இனங்களுக்கான உறவுகள் கட்டியெழுப்பப்படுவது அவசியம்.

நீண்டதொரு போரின் பின் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை நீக்கவோ துருவப்பட்டுள்ள சமூகங்களின் முரண்பாடுகளை களைந்து ஒன்றிணைக்கும் முயற்சிகளை முன்னெடுக்கவோ அரசு மட்டத்திலும் சிவில் சமூக மட்டத்திலும் போதிய செயல்பாடுகள் மேற்கொள்ளப்படாத இன்னிலையில் சமூக உறவுகளை கட்டியெழுப்ப நாம் என்ன பாத்திரம் வகிக்கலாம்.?

சமூகங்கள் தொடர்ந்தும் துருவப்பட்டிருக்கும் நிலையில் பல்வேறு புதிய பிரச்சினைகள் வேகமாக அதிகரித்து வருகின்றன. இதனால் சமூகங்களுக்கிடையான இடைவெளி மேலும் அதிகரிக்கும் அபாய நிலை.

சொந்த இடங்களுக்கு திரும்புதல், மீள் குடியேற்றம், சமூகங்களுக்கிடையான புரிந்துணர்வு என்பன பிரிக்கமுடியாது பின்னிப்பிணந்துள்ளன. எனவே சொந்த இடங்களுக்கு மீளுதல், மீள் குடியேற்றம் என்பன சமூகங்களுக்கிடையான உறவுகளை வலுப்படுத்தும் வகையிலேயே நிகழ்த்தப்படவேண்டும்.

இந்த பின்னணியில் தான் 20 வருடங்களுக்கு முன் வடமாகாணத்திலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களின் பிரச்சனைகளை அணுகவேண்டும்.

பலவந்தமாக வெளியேற்றப்பட்ட வடமாகாண முஸ்லிம்கள் புத்தளத்தில் அகதிமுகாம்களில் கடந்த 20 வருடங்களாக அல்லல்படும் அதே வேளை நூற்றாண்டு காலமாக வாழ்ந்து வந்த தமது பாரம்பரிய பிரதேசங்களை பௌதீக ரீதியாகவும் கலாச்சார ரீதியாகவும் படிப்படியாக இழந்துள்ளனர்.

எனவே வடமாகாண முஸ்லிம்களும் வட கிழக்கின் ஏனைய பிரதேசங்களில் யுத்தம் காரணமாக இடம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்களும் தமது சொந்த இடங்களுக்கு மீள சம உரிமையுள்ளவர்கள் என்ற அடிப்படையிலேயே இம்மீள் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்படவேண்டும். இதுவே சமூகங்களுக்கிடையான நல்லுறவை கட்டியமைக்கும்.

ஜனநாயகம், நீதி, சமாதானம் ஆகியவற்றிற்கு ஆதரவு கொடுக்கும் அனைத்து சக்திகளும் வடமாகாண முஸ்லிம்களினதும் ஏனைய பிரதேசங்களில் இடம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்களினதும் மீள் குடியேற்றமானது நீதியானது உடனடியாக மேற்கொள்ளப் படவேண்டியது என குரல் கொடுக்க முன்வர வேண்டும். இதுவே இன்றைய சவால்.

Nirmala ராஜசிங்கம் - SLDF Steering கோம்மிட்டீ

நன்றி: http://thesamnet.co.uk/?p=23013

No comments: