இன்று 'தேனீ' இணைதளத்தில், 'கொழும்பில் தமிழர், முஸ்லிம்கள் ஆதிக்கம் செலுத்த முடியுமானால் வடக்கில் சிங்களவர்கள் குடியேறுவதை தவறென்பது எப்படி? : ஜனாதிபதி கேள்வி' என்ற ஆக்கத்தைப் படிக்க நேர்ந்தது. அதில் மேல் மாகாண சபை உறுப்பினரான குமரகுருபரன், அச்சந்திப்பு தொடர்பாக கூறுகையில், 'வடக்கில் இராணுவக் குடியிருப்புகள் அமைக்கப்படுவது குறித்து தமிழ் தேசிய விடுதலை முன்னணியின் செயலாளர் நாயகம் எம்.கே. சிவாஜிலிங்கம் சுட்டிக்காட்டினார். அதற்கு ஆக்ரோஷமாக பதிலளித்த ஜனாதிபதி, 'கொழும்பில் தமிழ், முஸ்லிம்கள் ஆதிக்கம் செலுத்த முடியுமென்றால் வடக்கில் சிங்கள மக்கள் குடியேறுவதை எப்படி தவறு எனக் கூறமுடியும்' என கேள்வி எழுப்பினார்), என்ற பகுதியானது நடுநிலையற்ற போக்கையும், ஆதிக்க எண்ணத்தையும் வெளிப்படுத்தும் ஒரு கருத்தாகவே கணிக்க வேண்டும்.
உண்மையில் வடகிழக்கில் இராணுவக் குடியேற்றம் மற்றும் சிங்கள குடியேற்றத் திணிப்பு போன்ற நிகழ்ச்சிகள் அரசின் நேரடி உதவியோடும், படை அதிகாரிகளின் ஒத்தழைப்போடும் அரங்கேற்றப்படுகின்றன. இவற்றுக்கும் கொழும்பில் ஆண்டாண்டு காலமாக தமிழ் மற்றும் முஸ்லீம்களின் குடியிருப்பு, வியாபாரம் முதலானவை வியாபித்து இருப்பதற்கும் நிறையவே வேறுபாடுகள் உள்ளன.
வடகிழக்கில் தமிழ் மற்றும் முஸ்லீம்களது சொத்துக்களும் உடமைகளும் குறிப்பாக காணிகளும் ஆக்கிரமிக்கப்பட்டு சிங்களவர்களை பலாத்காரமாக குடியமர்த்துவதற்கும், கொழும்பு போன்ற பிரதேசங்களில் தமிழ் மற்றும் முஸ்லீம்கள் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வருகின்ற அதேநேரம் தாம் கஸ்டப்பட்டு உழைத்த பணத்தில் காணிகளை கொல்வனவு செய்து வீடுகளை அமைத்து குடித்தனம் நடத்துவதற்கம் இருக்கும வித்தியாசத்தை அனைவரும் அறிவர். இது ஜனாதிபதி அவர்களுக்கும் கூட நன்கு தெறியும். இது போன்ற ஆதிக்க மனப்பான்மையும், சிறுபான்மையினரின் உடமைகள் மீது அநீதியாக நடந்து கொள்வதும் மலர்ந்திருக்கும் இந்த சுமூகமான சுழலை சீர்குலைப்பதாகவே அமையும் என்பதை இந்த இணையத்தின் மூலமாக உணர்த்த விரும்புகின்றேன். சான்றோர் இதற்கான நடவடிக்கைகளில் இறங்கும் பட்சத்தில் விளைவுகளைத் தவிர்க்கலாம் என்பது அடியேனின் கருத்தாகும்.
No comments:
Post a Comment